Powered By Blogger

Tuesday, May 24, 2011

தமிழ் திரைப்பட வரலாறு


எஸ். தியடோர் பாஸ்கரன்



இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் போட்டோப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை போட்டோன் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர்.

1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் போட்டோங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.

கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.