Powered By Blogger

Thursday, February 2, 2012

இதயம் மீள நினைந்து பூரிக்கிறது




அக்கினிப் பெருமூச்சு நாடகப் பட்டறிவுக் குறிப்பு

1998ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த இராணுவ சிவில் நிர்வாகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததான விடயமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எழுந்த நாடகங்கள் காணப்பட்டன. நாடகத் தயாரிப்புக்கள் பற்றியும் நாடகத் தயாரிப்பில்
ஈடுபடுவோர் பற்றியும் அறிவதற்கான பெரும் முயற்சிகள் இராணுவத்தரப்பால் எடுக்கப்பட்டன. யதார்த்த உண்மைகளை நாடகத்தினூடு பேசியதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டது. இருப்பினும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்துணிவினால் பல்வேறு நாடகங்கள் தொடர்ந்து பல்கலைக்கழகம் என்னும் பாதுகாப்பு வெளிக்குள் மேடையேற்றப்பட்டன. இந்த வகையில் 2000ம் ஆண்டு ஐனவரி மாதம் பல்கலைக்கழக மாணவர்களால் மேடையேற்றப்பட்ட தமிழர் காணமற்போதல் தொடர்பான பிரச்சினைகளைப் பேசிய அக்கினி பெருமூச்சு நாடகத்தைக் குறிப்பிட முடியும். அநீதிக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற தற்துணிவோடு செயற்ப்பட்ட முப்பது இளைஞர் யுவதிகளோடு இணைந்து வேலை செய்த அனுபவம் பூரிப்பானது. இந்த நாடகத்தின் எழுத்துருவாக்கம், நெறியாழ்கை பொறுப்பை நான் ஏற்று நிறைவேற்றியிருந்தேன். அந்த மேலான அனுபத்தை பகி;ர்ந்து கொள்ள விளைகிறேன்.


யாழ்ப்பாண மக்கள் 1997ம் ஆண்டுக்குப் பின் ‘திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டு கிடப்பதாக உணர்ந்தார்கள். இராணுவ சிவில் ஆட்சி யாழ்ப்பாண மக்கள் மகிழ்வாக இருக்கிறார்களென்று காட்ட முயற்சித்தது. வெளியுலகுக்குள் செல்வதற்காக இராணுவ சிவில் நிர்வாகத்தின் ஊதுகுழல்களாக ‘தலையாட்டு பொம்மைகள்’ நிர்வாக இயந்திரத்தின் கதிரைகளில் இருத்தப்பட்டார்கள்.

இவர்கள் பத்திரிகையாளருக்கும் சர்வதேச பிரமுகர்களுக்கும் எல்லாம் நல்லபடி நடப்பதாகச் சென்னார்கள். உண்மையில் நிலைமை வேறாக இருந்தது. ஊர்கள் தோறும் அரச நிவாரனத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கைதுகள், திடீர் சுற்றிவளைப்புக்கள், வீதிகள் தோறும் சோதனை சாவடிகள், இராணுவ முகாம்கள், வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலைமை, பல இளைஞர்கள் திடீர் எனக் காணாமற்போதல் என்று நிலைமைகள் இருந்தன. உறவுகள் கானாமற்போன துயுர் பெரும் அவலமாகத் தொடர்ந்தது. பொருட்கள் விலை பல மடங்கு அதிகரித்தன. இராணுவ வியாபாரி மிகுந்த இலாபம் சம்பாத்தித்தான். இந்த நிலைமைகள் எல்லாம் மூடிமறைக்கப்பட்டன. இந்நேரம் கற்றோர் ‘மணிவிழா’ கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மேள தாளங்களோடு மணிவிழாக் கொண்டாட்டங்கள் தடல்புடலாக நடந்தது. உள்@ர் பத்திரிகையான உதயன் பத்திரிகையில் ‘பாராட்டி வாழ்த்துகின்றோம்’ இல்லாத பக்கங்கள் இருக்கவில்லை. பாடசாலை அதிபர்கள், அதிகாரிகள் என்று பலரும் பத்திரிகைகளில் பாராட்டி வாழ்த்துவதை விரும்பினார்கள். நீதியே விரும்பாத அன்றைய யாழ்ப்பாணச் சூழலில் அரசியல் செல்வாக்கால் பலர் சமாதான நீதிமான்களாக(து.P) பதவிப்பிரமானம் செய்து கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளில் அவர்களுக்கான பாராட்டு வாழ்த்துக்கள் வேறு. இந்த நிலையில் ஒரு சிலரே நடந்த அநீதிகள் பற்றி உலகுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். அதில் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

காணாமற்போன தமது உறவுகளை மீட்பதற்காக அதிகாரிகளின் வாசல்களிலும், அரசியல் கட்சி அலுவலகங்கள் முன்பாகவும், இராணுவ முகாம்களின் முன்பாகவும், மனித உரிமை ஆணைக்குழு முன்பாகவும் பல போராட்டங்கள் நடாத்திய உறவுகளைக் காணும் வாய்ப்பு பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த எமக்குக் கிடைத்தது. தீபமேந்திய போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், மறியல் போராட்டம், சர்வமதப் பிரார்த்தனை, அமைதி ஊர்வலம் என்று தம்மைத் தாமே உருக்கி நின்ற அந்த உறவுகளோடு நாம் பேசினோம். அழுது அழுது கதை சொன்னார்கள். பல்கலைக்கழக மாணவர்களாகிய எமக்குத் தம் கதை சொல்வதால் தங்கள் உறவுகள் மீளக்கிடைத்து விடுவார்கள் என்று நம்பிக் கதை சொன்னார்கள். கடிதங்கள் எழுதி எல்லா இடமும் அனுப்பியிருந்தார்கள். ஓரிரு விசாரணைக் கமி~ன்கள் நடந்திருந்தன. அங்கு சென்று கதறிக் கதறிக் கதை சொன்னார்கள். பத்திரிகையாளர்கள் படங்களை எடுத்துப் பத்திரிகையில் போட்டார்கள். செம்மணி மனிதப்புதைகுழிகள் தோண்டப்படும் போது அங்கு சென்று முழு நாளும் வெய்யிலில் கிடந்து தங்கள் பிள்ளையின் எலும்புக்கூடு வருகுதா? என்று பார்த்தார்கள். 

மகனைத் தொலைத்த தாயின் அவலமும், கணவனைத் தொலைத்த மனைவியின் அவலமும் எம் நெஞ்சைப் பிழிந்தன. போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக பஸ் ஏறி வருவதற்கு பணமில்லாத பலரைப் பார்த்தோம். தம் உறவுகளை இராணுவத்தினர் கைது செய்து மறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதேவேளை செம்மணியில் புதைகுழிகள் தோண்டும் போதும் அங்கும் நின்றார்கள். தங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டிருப்பர்கள் என்ற எண்ணமும், உயிருன்; இருக்கிறார்கள் என்ற எண்ணமும், அவர்களது மனதிற்குள் கிடந்து போராடி அவர்களை அலைக்கழித்ததைப் பார்க்க முடிந்தது. தன் பிள்ளையை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்ட முடிவில் உரையாற்றும் போது பின்வருமாறு கூறினார். நான் நுணாவிலில் இருந்து செம்மணி வெளிக்குள்ளாள ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வாரனான். செம்மணி வெளிக்குள்ளால நான் வரேக்க என்ர பிள்ளை புதைஞ்சு கிடந்து “அப்பா… அப்பா… என்னைக் காப்பாற்றுங்கோ” என்று கத்துறதுபோல இருக்கு. இந்த ‘இருமை’ நிலை சிலரை சித்தப்பிரமை பிடித்தவர்களாகவும் ஆக்கியிருந்தது. நினைவிலும் கனவிலும் தம் சொந்தம் வந்து போவதை எல்லோரும் உணர்ந்தார்கள். கோயில்களில் தம்மை வருத்தி வேண்டுதல் செய்தார்கள். சாஸ்திரியின் பிணி தீர்க்கும் ஆலோசனைக்கேற்ப உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டார்கள். சாஸ்திரிகள் பிழைத்துக் கொண்டதே தவிர வேறொன்றுமில்லை.

இளம் மனைவிகள் தங்கள் கணவன் காணாமற் போனதால் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கினார்கள். குங்குமப் பொட்டு வைப்பதற்கும், கலர்ச்;சீலை உடுப்பதற்கும் முழுவியளத்துக்கு நிற்பதற்கும் சிரமப்பட்டார்கள். அயலவர்கள் ‘வார்த்தைகள்’ அவர்களைப் பெரிதும் இம்சித்தன. பல பெண்கள் தம் கணவன் காணாமற் போனபோது தம் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார்கள். அன்று வயிற்றில் இருந்த பிள்ளைக்கு இன்று 5 – 6 வயது. தந்தை முகம் அதற்குத் தெரியாது. தந்தை இல்லாத் துயரை அந்தக் குழந்தை அனுபவிக்கிறது. சில இளம் மனைவியர் தம் வயது முதிர்ந்த பொற்றோரையும், பிள்ளையையும் பராமரிப்பதைக் காணமுடிந்தது. தன் விருப்பத்திற்கு மனம்விட்டு அழமுடியாமல் இருப்பதாக அப்பெண் சொன்னார்கள்.

இந்தத் துயர் எம் நெஞ்சை அடைத்தன. இவர்களின் துயர்களை அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் உணர்ந்திருக்கவில்லை. உலகு உணர்ந்திருக்கவில்லை என்பதை நாம் உணர்ந்தோம். இதற்க்காக எமக்குப் பரிட்சியமான நாடக வடிவம் ஊடாக இப்பிரச்சனையைப் பேசுவது எனத்தீர்மானித்தோம். எமது நோக்காகப் பின்வருவனவற்றைத் தீர்மானித்துக் கொண்டோம்.

காணாமற் போன ஒவ்வொரு உயிர்களுக்கும் என்ன நடந்தது என்னபதை அரசு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்;கான அழுத்தத்தை ஊடகங்களும் பொது அமைப்புக்களும் வழங்குவதற்குரிய தூண்டுதலை வழங்குதல்.


பாதிப்புள்ளான குடும்பங்களின் அவலத்தை அனைத்துத் தரப்பினர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

பாதிக்கப்பட்டோருக்கு ஆக்க பூர்வமான புனர்வாழ்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்குப் பலரும் உதவ வேண்டும்.

இனிவரும் காலங்களில் தழிழர் காணாமற்போதல் என்கின்ற அவலம் நடக்கக் கூடாது. இதற்காக தழிழ் மக்கள் ஒன்று சேர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும். நாடகத் தயாரிப்பிற்காக ஒரு மாத காலம் செலவிட்டோம். எமக்குள் கிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குத் தேவையான கவிதைகளை முதலில் தொகுத்துக் கொண்டோம். வெளிப்படுத்த வேண்டிய பிரதான விடையங்களையும் தீர்மானித்துக் கொண்டோம். வேதனைப்படும் இளம் மனைவியினதும் தாயினதும் துயரைப் பிரதானமாகப் பேசுவது எனத் தீர்மானித்துக் கொண்டோம். இதற்காக இரண்டு கவிதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.



1. கடலிற்குச்சென்ற கணவனைக் காணாது தவிக்கும் இருபத்திரண்டு வயது இளம் பெண்ணின் உண்மைக் கதை.

2. மகன் உயிரைப் பறித்துச் செல்லும் nஐமனைத் துரத்தும் தாயின் கதை தமிழர் பண்பாட்டில் காணப்படும் ஜதீகக் கதையை ஒத்ததான கதை.

எழுத்துருவாக்கத்தின் போது எனது மனக்கண்முன் நிறையப் படிங்;களே முதலில் வந்து நின்றன. இந்தப் படிமங்கள் அனைத்தும் நாம் சந்தித்தவர்கள்., கதைக்கும் போது அவர்களின் வார்த்தைகளிலிருந்தும் நழுவி விழுந்தவை. நான் ஒரு பறவையான எழுத்துருவை உருவாக்கி அதற்கு ‘அக்கினிப் பெருமூச்சு’ என்று பெயரிட்டு அதை நண்பர்களுக்கு வாசித்துக் காட்டினேன். அவர்களை உணர்வு ரீதியாக எழுத்துரு பாதித்திருந்தது. ஆனால் அவர்களிடம் ஒரு கேள்வி இருந்தது. நாடகத்தின் சில காட்சிகள் எவ்வாறு காட்சிப்படுத்தப்படும். உதாரணமாக நிலம் வெடித்து உயிர்கள் மேலெழுந்து வருதல் எவ்வாறு மேடையில் சாத்தியமாகும். இந்த வகையான அசாத்தியமான விடயங்களை பின்னர் எங்களது தொழில் நுட்பம் சார் விற்பன்னர்கள் சாத்தியமாக்கித் தந்தார்கள். 

எழுத்துருவை ஓரளவு ப+ர்த்தியாக்கிய பின்பு நான் நாடகத்தின் இசையமைப்பு பொறுப்பை ஏற்றிருந்த றொபேட்டுடன் இரண்டு மூன்று முழு இரவுகள் செலவிட்டேன். றொபேட்டை சந்திக்கும் போது கணனி கலைக்களஞ்சிய மென்தட்டில் இருந்து பெறப்பட்ட சில வகையான இசைகள் என் கையில் இருந்தன. நான் ஒவ்வொரு சூழலையும் விபரித்துச் சொல்ல றொபேட் இசை மெட்டுக்களை அமைத்தார். இரவிரவாக பிளேன்ரீ குடித்து மனதை ஈடுபடுத்தி றொபேட் அமைத்த இசை மெட்டுக்கள் பார்வையாளர் நெஞ்சை நெகிழவைத்தன. ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகத்தின் உயிராக இசை அமைந்திருந்தது. அதனைப் பலரும் வியந்தார்கள், பாராட்டினார்கள். 



இதன் பின் நடிகர்களைச் சந்தித்து ஒத்திகைகளை ஆரம்பித்தேன். நாடகத்தில் நடன அமைப்புக்களை அதிகம் பயன்படுத்த எண்ணியதால் நடனம் தெரிந்த பலரையும் இதில் இணைத்துக் கொண்டிருந்தோம். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல மாணவிகள் ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடக வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். நாடகம் நடித்திராத பலர் இதில் பங்குபற்றி மிக அற்புதமாக நடித்தார்கள். குறிப்பாக கணவனைத் தொலைத்த இளம் மனைவிக்கு நடித்தவரும் அவள் தாய்க்கு நடித்தவரும் ஆரம்பத்தில் இருந்ததை விட அதிகப்படியான ஆற்றுகைச் செழுமையை தொடர்ச்சியான ஆற்றுகையின் போது கொடுத்து நின்றார்கள். நாடகத்தின் ஒத்திகைகளை செய்து கொண்டிருக்கும் போது பல அற்புதமான புதிய கற்பனைகள் உருவாகின. நெறியாளனும் நடிகர்களும் கொடுத்து வாங்கக் கூடியதான ‘வளமான சூழல்’ ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகத் தயாரிப்பின் போது காணப்பட்டது. இந்த வளமான சூழலை ஆற்றல் உள்ள நடிகர்கள் சிரு~;டித்திருந்தார்கள்.

‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகம் தான் எடுத்துக் கொண்ட விடயத்தைப் பேசுவதற்கு தனக்குத் தேவைப்பட்டவற்றையெல்லாம் எடுத்து ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொண்டது. ‘செய்து காட்டல் பண்பு’ இவ்வரங்கில் அதிகம் உண்டு. சமூகத்தின் நலனிற்காக உயிரைக் கொடுக்க முன்வந்த போராளிகள், இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாந்தர்கள், போரை விரும்புவோர், அட்டூழியம் புரிவோர், சுயநலம் மிக்க கற்றோர் என்ற பல தரப்பினர் பற்றிய எமது எண்ணத்தை ‘செய்துகாட்டல் வெளிப்பாடு’ மூலம் வெளிப்படுத்த முற்பட்டோம். இந்தப் பாத்திரங்களுக்கிடையிலான முரணே நாடகம். இவற்றுக்கிடையிலான ஊடாட்டத்தில் அழுகை, சோகம், ஏக்கம், தவிப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகள் மேலெழுகின்றன. மொத்தத்தில் அவலச்சுவை மேலோங்கி நிற்கும் சாதாரண வாழ்வில் காணப்படும் பல தனித்தனிக் கதை மாந்தர்களின் உள்ளடங்கியதான ஒரு ‘பொதுப்பாத்திர வெளிப்பாடு’ இங்கு காணப்படும். வகை மாதிரிப் பாத்திர வெளிப்பாடாகவும் இதைக் கருதலாம். ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகம் நான்கு பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. பாத்திரங்கள் தம் பண்புகளோடு அறிமுகமாகி தமக்கிடையில் உறவுகொள்ளுதல்

பாத்திரங்களை ஒருவர் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார். அறிமுகம் பாத்திரங்கள் தொடர்பான விமர்சனங்களை உள்ளடக்கியதாகவும் அமையும். இதே வேளை பாத்திரங்கள் பேசுவதன் ஊடாகவும் செயற்படுவதன் ஊடாகவும் தாம் யாரென்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தி நிற்பர். இத்தோடு ஒவ்வொரு பாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுவதும் முரண்படுவதும் கூட அறிமுகத்தில் நடக்கும். இந்த அறிமுகப் பகுதி பத்து நிமிட நேரம் நடைபெறும். மேடையின் முன் திரை மூடியிருக்க திரைக்கு முன் நின்ற பகுதியில் பாத்திரங்கள் தோன்றி அறிமுகம் நிகழும்.

2. இராணுவத்தினரின் அட்டூழியம்.

சமாதானப் போர் என்ற கோ~த்தை முன்வைத்து நடத்தப்பட்ட கைதிகள், சித்திரவதைகள் காணாமற் போதல்கள் பற்றி இதில் பேசப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அந்தக் காலங்களில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதற்காக வீடுகளைத் துப்புரவு செய்யும் போது தங்கள் வளவுகளுக்குள் புதைகுழிகள் இருப்பதை இனங்காண்பார்கள். இதனை உணர்த்துவதாக, எம்மைச் சுற்றி எங்கும் புதைகுழிகள் என்பதை உணர்த்துவதாக மேடை எங்கும் புதைகுழிகள் காணப்படும். அவற்றின் நடுவில் சிறிய வீடு ஒன்றும் இதில் வெளிப்படுத்தப்படும். கூடு சிதைந்த ஊரும், தினயன்களான மனிதர்களும் இராணுவ ஆட்சியில் அவதிப்படுவதை நினைவுறுத்துவதாக இப்பகுதி அமையும்.

3 கணவனைத் தொலைத்த இளம் பெண் ஒருவரின் உண்மைக் கதை.

கணவன் இல்லாதபோது சமூகம் ஒரு இளம் மனைவியை எவ்வாறு பார்க்கிறது என்பதையும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு, அவர்கள் கதிரையைக் காப்பதற்காகத் தப்பித்துக் கொள்ளுதல், கோயில் வேண்டுதல்கள் குங்குமப் பொட்டை போடுவதா? அழிப்பதா? தாலியைக் கழற்றுவதா? அணிவதா? என்ற மனப்போராட்டங்கள் பற்றி இப்பகுதியில் உணர்ச்சியோடு பேசப்படுகிறது.

4. மகளைத் தொலைத்த தாய் தன் மகனைத்தேடுதல் 

தன் பிள்ளையைக் கொண்டு செல்லும் ஜெமனை இந்தத் தாய் துரத்திச் செல்கிறாள். ஜெமன் இருக்குமிடத்தைச் சென்றடைவதற்காக பலரின் உதவியை நாடுகிறாள். அவர்கள் ஒவ்வொருவரும் உதவி செய்வதாகக் கூறி இவளிடம் இருந்து பலவற்றைப் பறித்துக்கொண்டு ஒன்றுமற்ற வெறுமையில் அவளை விடுகின்றனர். தன்பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக தன் உடலைக் கொடுக்கிறாள். தன் கண்களைக் கொடுக்கிறாள். தன் அணைப்பைக் கொடுக்கிறாள். மட்டக்களப்பு திரகோணமலை போன்ற பகுதிகளில் தன் கணவனை, தன் தம்பியை, தன் மகளை காப்பாற்றுவதற்காக இராணுவ அதிகாரிகளுடன் இரவுகளைக் கழித்த பெண்களின் கதைகளை இவை நினைவூட்டுகின்றன. போர் அக்கிரமத்தினால் எல்லாவற்றிலும் பற்றாக்குறை நிலவியது. இதனால் ஒவ்வொருவரும் தம் பசி போக்க மற்றவனைக் கவனிக்காத போக்கு பிறரின் மீது அன்பு செலுத்த முடியாத நிலை என்பன தமிழர் பகுதியில் அதிகரித்து வருவதையும் கூட இந்தச் சம்பவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. தாயின் நினைவில் புதைந்து கிடக்கும் தன் குழந்தை புதைகுழி வெடித்து எழுந்து வருவதான நினைவுக் காட்சிகளும் இதில் வெளிப்படுத்தப்படுகின்றன. 

நாடகம் தன் உணர்வையும் பொருளையும் வெளிப்படுத்த இசைப்பாடல்களையும் படிமங்களையும் அதிகம் பயன்படு;திக் கொண்டுள்ளது. நடிப்பும் வார்த்தைகளும் நடனக்கோலங்களும் காட்சிகளும் பொருள் வெளிப்பாட்டுக்கு செழுமை சேர்த்துள்ளன. ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகம் 2000ம் ஆண்டு மாசி மாதம் 9ஃ12ஃ13 திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டு பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 தடவை மேடையேற்றப்பட்டது. இக்காலத்தில் காணப்பட்ட இராணுவக்கெடுபிடி சூழல் காரணமாகவே உட்கிடையாகவே தமிழர் வாழ்வு யதார்த்தம் பேசப்பட்டது. சட்டத்தின் பிடிக்குள் சிக்கிவிடாமல் குறியீடுகளாகப் பலவற்றைச் சொல்லவேண்டி இருந்தது. அன்றைய இராணுவச் சூழ்நிலைக்குள் வாழ்ந்த மக்கள் அந்தக் குறியீடுகளை உணர்ந்து கொண்டனர். ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகத்தில் மனதில் எழுந்த எண்ணங்களும் படிமங்களும் குறியீடுகளாகவே அதிகம் காட்சியாகின்றன. படிமங்கள் குறியீடுகள் நாடகப் பாங்கான அசைவுகள், இசை, நடனம் அனைத்தும் பிசைந்து ஒரு அவல உணர்வை பார்வையாளரிடம் ஏற்படுத்துகின்றது.

நாடகத்தைப் பார்த்த பலர் அழுதார்கள், வருந்தினார்கள், தங்கள் தலை பாரமாக உள்ளதாக உணர்ந்தார்கள். பாதிக்கப்பட்டோர்க்கு உதவி செய்ய முன்வந்தார்கள். குறிப்பாக நாடகத்தைப் பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஒன்றுகூடி பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவுவதற்காக நிதி சேகரிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்து 125 மாணவர்களுக்கு உதவினார்கள். இதற்கு ‘கைகொடுத்த நிதி’ என்று பெயரிட்டார்கள். நிதி திரட்டலுக்காக ‘அக்கினிப்பெருமூச்சு’ நாடகத்தின் தொடர்ச்சியாக ‘உயிர்விசை’ என்னும் நாடகத்தைத் தயாரித்திருந்தோம்.



இராணுவ இயந்திரத்தின் அட்டூழியங்களுக்கு எதிர்ப்புக் குரலாக எழுந்த அக்கினிப் பெருமூச்சு நாடகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்ட அனைவரும் முழுமன ஈடுபாட்டுடன் காணப்பட்டனர். தங்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையை வெளிப்படுத்துகிறோம் என்ற திருப்தியில் காணப்பட்னடனர். பலர் தங்கள் வீடுகளுக்கும் தெரியாமல் ஆற்றுகையில் பங்குபற்றியிருந்தனர். உண்மையில் நேர்மையுடனும் ஈடுபாட்டுடனும் அனைவரும் காணப்பட்டதால், ‘அக்கினிப் பெருமூச்சு’ நாடகம் ஆன்ம வலுவுள்ளதாகக் காணப்பட்டது. இராணுவக் கெடுபிடி காரணமாக பல தடைவ இறுதியாற்றுகை என்று தீர்மானித்து மேடை ஏற்றுவோம். ஆனால் மீண்டும் மீண்டும் நாடகம் உயிர்பெறும். 2000 ஆம் ஆண்டு யாழப்பாணத்தில் சுழிபுரம் என்ற இடத்தில் நாடகத்தை ஒழுங்குபடுத்தியோர் இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதனோடு நாடகத்தை மேடையேற்றுவதை இடைநிறுத்திக் கொண்டோம்.

ஆனால், மீண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் விளைந்த ‘சமாதான’ சூழலில் இந் நாடகத்தை மேடையேற்றினோம். கிட்டதட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு யாழப்பாணத்தில் மட்டுமல்லாது வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களிலும் மேடையேற்றினோம். இதில் யாழ்ப்பாணத்திலும் திருகோண மலையிலும் நடந்த ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ நிகழ்வில் மேடையேற்றியதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

காணாமற்போனோர் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாத பெரும் பிரச்சினையாகத் தொடர்கிறது. இதனால், அக்கினிப் பெருமூச்சு நாடக ஆற்றுகையின் தேவை தொடர்ந்து உணரப்படுகிறது. சமாதான காலத்தில் மேடையேற்றியபோது போர்க்கால நாடகத்தின்; வலிமையை நன்கு உணர முடிந்தது.

இறுக்கமான பயம் சூழ்ந்த காலத்தில் பிறர் ஈனநிலை கண்டு துள்ளிய நாடகக் கலையுடன் பிணைந்து துணிச்சலோடு செயற்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடனும் அரங்கச் செயலாளிகளுடனும் இணைந்து செயற்பட்ட மேலான அனுபவத்தை என் இதயம் மீள மீள நினைந்து பூரிக்கிறது.

No comments:

Post a Comment